மெல்லொளி - பாகம் 6
மெல்லொளி - பாகம் 6
ராஜகோபால் வாத்தியார் கற்றுக்கொடுத்த நுணுக்கமான சுரங்களை சிறப்பாக கற்று அவர்
இறக்கும் வரை அவரது அன்புக்குரிய மாணவனாக
இருந்த ஏழை வீட்டு தங்கவேலுக்கு, வாத்தியார் மறைவுக்குப் பின் என்ன செய்வது என்று
தெரியவில்லை. அந்த சபாவை எடுத்து
நடத்திடவும் யாரும் இல்லை. தங்கவேலுவுக்கும்
கையில் பணமும் இல்லை. அங்கே இங்கே என்று சுற்றித்திரிந்து ஒரு
கடையில் வேலைக்கமர்ந்தார், எடுபிடியாகத்தான். கோடை வெயில், கிராமத்திலும் பஞ்சம்.
பிழைப்புத் தேடி கூட்டம் கூட்டமாக, கட்டம் கட்டமாக, மலாயா வந்த கும்பலோடு 20 வயது தங்கவேலு தானும் தன் பாய் தலையணை மட்டுமல்லாது தனது ஆசான் கொடுத்த ஆர்மோனியப் பெட்டியோடு வந்து சேர்ந்தார். இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்பதை இங்கு வந்த பிறகுதான் புரிந்து கொண்டார். ஆனால், நினைத்த நேரத்தில் கப்பலில் திரும்பி போய்விட முடியுமா என்ன? கடுமையான உழைப்பு, கல் உடைத்தல், மரம் வெட்டுதல், சாலையில் தார் கொட்டுதல் போன்ற பல்வேறு வேலைகள் செய்தார்.
ஆண்டுகள் மறைந்தோடின. உற்றார் உறவினர் யாருமற்ற அவருக்கு ரப்பர் மரம் சீவிக்கொண்டிருந்த காமாட்சியை
பிடித்திருந்தது. ஒரு ஏழை இன்னொரு ஏழையோடு சேர்ந்து வாழ உடன் இருந்த உழைப்பாளிகள்
உதவினர். தோட்டத்து மாரியம்மன் கோவிலில் தாலி கட்டி குடிசை வீட்டில் குடித்தனம்.
ஏழைக்குடிசையில், உற்றார் உறவினர் யாருமற்ற இருவரும்
ஒருவருக்கு ஒருவர் அன்பில் சளைத்தவரல்ல என்று வாழ்ந்தனர். ஒரு வேளை கஞ்சி குடித்தாலும் அன்னப்பூரணி மாதாவுக்கு
நன்றி சொல்ல மறந்ததில்லை தங்கவேலு. எல்லாம் வாத்தியார் சொல்லிக்கொடுத்தது. தன் அன்பு மனைவி காமாட்சிக்கும் தனக்குத் தெரிந்த
எல்லா விஷயங்களையும் கற்றுக்கொடுத்தார். இன்பமான தாம்பத்தியத்தின் அடையாளமாக
உதித்த தன் தலை மகனுக்கு, பசித்திருந்த வயிற்றுக்குச் சோறு போட்டு, நற்பண்புகளும் கற்றுக் கொடுத்து, இசை ஞானத்தை ஊட்டிய தன் ஆசான் ராஜகோபாலின்
பெயரையே சூட்டி மகிழ்ந்தார். பெயர் சொல்லி
அழைத்தால் தன் குருவுக்கு மரியாதை இல்லை இன்று, தன் மகனை ஐயா ராஜா என்று
அழைப்பார். காமாட்சி கேலி செய்வாள். தன்
கணவனை சீண்டுவதற்காகவே, ராஜகோபாலூ, கோபாலூ என்று நீட்டி இழுப்பாள். சீமான்கள் வீட்டில் இல்லாத சந்தோஷம்
தங்கவேலு-காமாட்சியின் குடிசையில் நிறைந்து வழிந்தது.
ராஜகோபாலுக்குப் பிறகு பிறந்த இரண்டு பெண்
குழந்தைகளும் ரப்பர் தோட்டத்தில் பரவிய விஷக்காய்ச்சலில் ஒருவர் பின் ஒருவராக
இறந்து போனார்கள்.
ஒன்றே ஒன்று, கண்ணே, கண்ணு என்று ராஜகோபாலை கண்ணும்
கருத்துமாக வளர்ந்து தோட்டத்தில் இருக்கும் தமிழ்ப் பள்ளிக்கு அனுப்பினார்
தங்கவேலு. பாடம் நடக்கிறதோ என்னவோ,
ஒவ்வொரு நாளும் ராஜகோபாலுக்கு ஏழைக்குடிசையில் இசை பயிற்சி நடக்கும்.
ச...ரி..க..ம..ப.த நி.. ... ஏழைக்கு இசை சொந்தமில்லையா என்ன?
தோட்டத்தில் சம்பள நாள்.
“வாங்க வேலு, கள்ளு குடிக்கலாம்’ எத்தனை முறை
அழைத்தாலும், எத்தனை பேர் அழைத்தாலும் வேலு மட்டும் குடிக்கமாட்டார். அவர்கள் குடிக்கும் போது திடலில் அவர்களோடு
அமர்ந்து உரையாடுவார். பாடுவார். ஆனால்
குடியோ பீடியோ, சுருட்டோ எந்த பழக்கத்துக்கும் அவர் அடிமை இல்லை.
“இப்படி கல்லு ஓடைக்கிறது, மரம் வெட்டறது, ரோட்டில தாரு போடறது, இதெல்லாம் செய்யும் உடம்பு
கிடந்து பாடா படுத்துதில்ல. ஒரு கொவல
கள்ளு குடிச்சா அசதியெல்லா காணா போயிடுமில்லவே, வா வேலு”
ஒரு வேளை சோறு ஒரு வேளை கஞ்சி மட்டுமே அவர்கள் உணவாக
இருந்தது.
“கஞ்சி குடித்தால் கல் உடைக்க முடியாதா, மாணிக்கம்? கள்ளு
குடிச்சாதான் கல்லு உடைக்க முடியும்- னு யார் சொன்னது?
அவருடைய மன உறுதி அந்த தோட்டப்புறத்தில் ஒரு பேசும்
பொருளாக இருந்தது.
தோட்டத்து நிகழ்ச்சிகளில் எம்.கே. தியாராஜ பாகவதர் பாடல்கள்
சிறப்பாக பாடுவார். அப்போதைய பிரபலமான
பாடல்கள் அவை.
“இந்த ஆளுக்கு எப்படி இம்புட்டு ராகம் தெரியுது?,
என்னாமா பாடுறாரு” என்று எல்லோரும் ஆச்சரியப்படுவதுண்டு.
ஜெயந்தி அதிஷ்டக்காரி.
மெல்லொளி மெல்ல எழும்
Comments
Post a Comment