மெல்லொளி - பாகம் 1

மெல்லொளி - பாகம் 1

அப்பா…  

அப்பாவின் கைவிரல்கள் அவள் நினைவுக்கு வந்தன. தன் விரல்களில் சின்னதாய் ஒரு கீறல் பட்டுவிட்டாலும் "என்னம்மா ஆச்சு? பாத்து செய்யக்கூடாதாம்மா" என்று அவர்  எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும் அதை அப்படியே போட்டு விட்டு ஓடி வந்து அவர்  கைகளுக்குள் தன்  கைகளை சேர்த்து கொண்டு, என்னென்ன கைவைத்தியம் செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் செய்வார். மகளின் சில விநாடி வேதனையை கூட அவரால் தாங்கிக் கொள்ள முடியாது. பெரிய காயமோ வலியோ ஏதும் இல்லையென்றாலும் அப்பாவின் கைகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள மாட்டாள் இந்தக்கள்ளி. அவர் கரங்களுக்குள் தன் கைகள் இருக்கும் போது கோழிகுஞ்சு தாயின் சிறகுக்குள் பாதுகாப்பாக இருப்பது போல உணர்வாள்.  செல்லப்பெண்ணுக்கு ஏற்ற செல்லமான அப்பா.  

அப்பாவின் கைவிரல்கள் மிக அழகானவை. விரல்கள் நீளமானதாக இருக்கும். நேர்த்தியாக  வெட்டப்பட்டு எப்போதும்  சுத்தமாக காட்சியளிக்கும் நகங்கள். மற்ற உடல் உழைப்பு தொழிலாளிகளுக்கு இருப்பதை போல கரடு முரடானதாக இல்லாமல் அவரது விரல்கள் இளம் வெண்டைக்காய்களைப் போல் இருப்பதற்கு சிறு வயதிலிருந்து ஆர்மோனியம் வாசித்து வருவதால் தானோ என்று அவள் எண்ணிக்கொள்வாள். ஆனால் அப்பாவோ,  தன்  உடல் தனக்கு இசை ஞானத்தை புகட்டிய அவரது தகப்பனாரின் வித்து என்பார்.

இளைமை தளர்ந்து முதுமையை நோக்கி அவர் நகர்ந்து கொண்டிருந்த போதும், அவரது விரல்கள் மட்டும் அப்படியே இருந்தன. பருவ வயதிலும் கூட அடிக்கடி அப்பாவின் கைகளை பற்றிக் கொள்ளும் பழக்கம் இருந்தது அவளுக்கு.  அப்பா தோற்றத்திலும் அழகுதான்.  ஆறடிக்கும் சற்றே குறைவான உயரம்.  எலுமிச்சை நிறத்தில் இருப்பார். வசீகரமான கண்கள்.  அப்பாவின் 50-ஆவது வயதில் அவரது கை விரல்களில் தோல் சுருங்குவதை பார்க்க முடிந்தது.  அதற்கான காரணமும் ஜெயந்திக்கு தெரியாமல் இல்லை. அம்மாவின் நோயும் தொடர்ந்த அவரது இறப்பும், அண்ணன்மார்களின் பாராமுகமும்  அவரை அலைகழித்திருக்க  வேண்டும். கண்ணம்மா என்ற கண்மணி இல்லாத உலகத்தில் தான் இனி தனி ஆள் என்ற கவலை அவரை விரைவாக முதுமைக்கு தள்ளியிருந்தது.   கட்டுக்கோப்பான உணவு பழக்கமும், தினசரி யோகாசனமும் கடைபிடிக்கும் அப்பா 100 வயது வரை மார்க்கண்டேயனாகவே வாழ்ந்திருக்கக் கூடும்.  ஆனால், நாம் எதிர்பார்த்ததெல்லாம் நடந்து விடுமா என்ன?   விதியா? வினைப்பயனா? காலம் யாருக்கும் காத்திராமல்  அப்பாவையும் அள்ளிக் கொண்டு போனது!

“எந்த சூழ்நிலையிலும் இசை பயிற்சியை கைவிடக்கூடாதம்மா, ஒரு நாளைக்கு 1 மணி நேரம் ஒதுக்க கஷ்டமாக இருந்தால், குறைந்த பட்சம் 15 நிமிஷமாவது ஆர்மோனியத்தை வாசிக்கனும், உனக்கு பிடிச்ச ஏதாவது ஒரு ராகத்தை, விருப்பமான பாடலை, கொஞ்ச நேரம் பாடினாலும் போதுமம்மா”

“இது போட்டிக்கோ, மேடையில, ஒரு நிகழ்ச்சியில பாடுனும் என்பதற்காக இல்ல, நமக்கு இசை ஞானத்தை ஊட்டிய குருமார்களுக்கு நாம செய்கிற நன்றிக் கடன்,  குருதட்சணை; இசை  என்பது சாமி-மா.  ஒரு வித்தையை நமக்கு ஒருத்தர் கத்துக்குடுக்கிறாருன்னா அது நமக்கு கிடச்ச வரம், அது ஒரு தவம்.  நாம இந்த உலகத்த விட்டு போறதுக்கு முன்னாடி,  நாம கத்துக்கிட்டத இன்னொருவருக்குச் சொல்லிக்கொடுத்துட்டுதான் உசிர விடனும்.  காசு வாங்கிகிட்டு சொல்லிக்குடுக்கிறது வேற.  நாம் இந்த வித்தையை தானமா கொடுக்கனும்.  அதான் வித்யா தானம்”

“அதனால தான் தாத்தா எனக்கு சொல்லிக்கொடுத்ததை நான் ஒனக்கு கத்துக்குடுக்குறேன்

 அன்று அப்பா மகளுக்குச்  சொல்லிச்சென்ற ஆத்திச்சூடி இது. 

தனது ஏழாவது வயதில் ஆர்மோனியத்தின் ஒவ்வொரு கட்டைகளாக தட்டி, வெவ்வேறு ஓசைக்கு, வெவ்வேறு விதத்தில் காற்று அழுத்தம் கொடுக்கும் வித்தையை கற்றுக்கொடுக்கும் போது  முதலில் அவளுக்கு அது ஒரு விளையாட்டுப் பொருளாக தெரிந்தது.  மூத்தவன்  கணேசனுக்கும் இளையவன் சரவணனனுக்கும் வாய்ப்பாட்டும் வரவில்லை, ஆர்மோனியம் வாசிப்பதிலும் ஈடுபாடு இல்லை. சரவணனுக்குப் பின் 5 ஆண்டுகள் கழித்து பிறந்த ஜெயந்திக்கு இசை இலகுவாக பற்றிக்கொண்டது.   அப்பாவின் வெண்டைகாய் விரல்கள் ஜெயந்தியின் விரல்களை லாவகமாக பற்றிக்கொண்டு பொறுமையாக செயல்படும். மிக விரைவாக ஆர்மோனியத்தை  கற்றுக்கொண்டது மட்டுமல்ல,   இசையை ரசித்து அதனை அப்படியே உள்வாங்கிக் கொண்டு பாடும் திறமையும் இருந்தது ஜெயந்திக்கு.

“என் செல்லக்குட்டிக்கு ரோஜா மொட்டு மாதிரி விரலு” என்று அவள்  விரல்களை எடுத்து தன் கன்னத்தில் வைத்துக்கொள்வார். ஒவ்வொரு முறையும் விரல்களை முத்தமிடுவார். அந்தக் காட்சிகள்  நிழல் படங்களாய் அவ்வப்போது அவள் நினைவுக்குள் தோன்றி மறையும்.   அன்று அப்பாவைப் போல மென்மையாக, இதழ் பிரியாத மொட்டாக இருந்த விரல்கள் இன்று  70 வயது மூதாட்டியின் விரல்களைப் போல, தோல் சுருங்கி ஆங்கங்கே சில காயங்களோடு, தழும்புகளோடு கடினமாகிப் போயிருந்தன. 

“மனுஷ வாழ்க்கைக்கு தேவையான எல்லாத்தையும், முக்கியமா, ஒரு பொண்ணு தெரிஞ்சுக்க வேண்டிய உலக விஷயங்கள நானும் அம்மாவும் உனக்கு கத்துக் குடுத்திருக்கோம். இப்போ இல்லாட்டாலும், சமயம் வரும்போது  நாங்க சொல்லிக்கொடுத்த விஷயங்களை அசை போட்டு தேவையானத நீயே தேடி பயன்படுத்திக்கோ. என் செல்லத்த விட்டு நான் எங்கும் போக மாட்டேன்-மா – கூப்பிடும் தூரத்தில தான் இருப்பேன். கூப்பிட்டவுடன் ஓடி வந்திடுவேன்”

தன் திருமணத்தின் போது அப்பா சிரித்துக்கொண்டே சொன்ன வார்த்தைகள் அவை.

அப்பா...  ஒரு கணம்  மெல்லியதாய்  குரல் எழப்பி அழைத்தாள். 

 “அழைத்தால்  வருவேன்”என்றாரே!  

"என்னம்மா" என்று அன்பொழுக அப்பா தன்  அருகில் வந்து நிற்க மாட்டாரா?  தோளோடு தன்னை அணைத்துக்கொண்டு, அலை பாயும் இந்த மனசுக்கு ஒரு வழி சொல்ல மாட்டாரா?  

“அப்பா.. அப்பா..  மீண்டும் தன் உதடுகளை குவித்து சன்னமாய் அழைத்தாள். கண்ணீர் துளிகள் திரண்டு விழிகளை  மறைத்தன.  

"அம்மா.. ஷாலு கிளம்பிட்டாளா" சிக்கிரம் கிளப்பும்மா அவளை, பஸ் வந்திடப்போவுது"?   

ஓங்கி ஒலித்த பாரதியின் குரல் கேட்டு சுதாரித்தாள்ஜெயந்தி.


                                                                                            மெல்லொளி  மெல்ல எழும் 







Comments

Popular posts from this blog

மெல்லொளி - பாகம் 4

மெல்லொளி - பாகம் 3