மெல்லொளி - பாகம் 5

 

மெல்லொளி - பாகம் 5

 

சவக்காரக் கட்டிகள், குளியல் ஷாம்பூ போன்றவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் ராஜகோபாலுக்கு வேலை.  வித விதமான வடிவங்கள், வித விதமான வாசனைகள் கொண்டு தயாரிக்கப்பட்டு சவக்கார கட்டிகள், வண்ணக் காகிதங்களால் இன்னொரு இயந்திரத்தில் சுற்றப்பட்டு கான்வேயர் என்ற பெல்ட்-டில் வரிசை வரிசையாக வரும். அவற்றை சிறு சிறு பெட்டிகளில் அடுக்கி வைக்க பெண் ஊழியர்கள் அமர்த்தப் பட்டிருந்தார்கள்.  அவர்கள் அடுக்கி வைக்கும் அந்தச் சிறு பெட்டிகளை தூக்கி பெரிய பெட்டிகளில் அடுக்கி வைக்க ஒவ்வொரு வரிசையிலும் இரண்டு ஆண் ஊழியர்கள்.  அவர்களில் ஒருவர் ராஜகோபால்.   அதன் பிறகு அந்தப் பெரிய பெட்டிகளை போஃர்க் லிப்ட் என்ற பளு தூக்கி வண்டியில் ஏற்றி, கிடங்கில் அடுக்கி வைப்பது, அவற்றை கணக்கெடுத்து அங்குள்ள செக்யூரட்டி பதிவேட்டில் குறித்து வைப்பது இவர் பணி.  அவரது ஏழ்மைக்கு தமிழும் மலாய் மொழியும்  மட்டுமே பயில வாய்ப்பு கிட்டியது. அதை வைத்துக்கொண்டு பல எடு பிடி வேலைகளைச் செய்து இறுதியில் இந்த தொழிற்சாலையில் சேர்ந்தார்.  உடல் உழைப்பு தொழிலாளி என்றாலும் கூட, அவர்  எப்போதும் தூய்மையாகவும், நேர்த்தியாகவும் காட்சியளிப்பார்.  சக தொழிலாளிகள், மேலாளர் மற்றும் சீன முதலாளி அனைவரிடத்திலும் பண்பாக நடந்து நற்பெயரை சம்பாதித்து வைத்திருந்தார். மற்ற தொழிலாளிகள் கொச்சைத் தமிழ் பேசும் போது, இவர் மட்டும் தூய தமிழில் உரையாடுவார்.  குரல் உயர்த்திப் பேசுவதோ, மரியாதைக் குறைவாக பேசுவதோ கிடையாது.   இவை அனைத்தும் அவர் அப்பா அவருக்கு கற்றுக்கொடுத்த பாடங்கள்.

 

தமிழ் நாட்டில் இருந்து மலாயாவுக்கு புலம் பெயர்ந்த அவரது தகப்பனார் தங்கவேலு மதுரைக்காரர்.  மதுரையில் அவர் வசித்த தெருவில் ஒரு சங்கீத சபா செயல்பட்டுக்கொண்டிருந்தது.  அங்கு சங்கீத வகுப்புகள் நடக்கும். உள்ளூர் வெளியூர் மாணவர்கள் வந்து போவார்கள்.  சபாவின் பெரிய மண்டபத்தில் அவ்வப்போது நாடகங்களும் கச்சேரிகளும் நடைபெறும்.  16 வயது இளைஞனாக இருந்த தங்கவேலு அருகிலிருந்த கிராமத்து பாடசாலையில் 10 வயது வரை படித்து விட்டு, குடும்பச் சூழல் காரணமாக எடுபிடி வேலைகள் செய்து வந்தார்.  சபாவில் சமையல் மற்றும் துப்புறவு வேலைக்கு ஆள் தேவை என்பதை அறிந்து தனக்கு ஒரு வேளை சோறாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அங்கு நுழைந்தான். கிழிந்த அரை டிராயர், ஷர்ட் அணியா திறந்த மார்பு, சுருள் சுருளான கேசம், அடர்த்தியான புருவம், தூசு படிந்த முகம் இந்த தோற்றத்தில் அவன் சரீரம் திவ்வியமாக தெரிந்தது ராஜகோபால் வாத்தியாரின்  கண்களுக்கு. 

.

சபாவில் எடு பிடி வேலைகள் செய்தான். உணவு மட்டுமே அவனது ஊதியமாக இருந்தது.  ஒவ்வொரு நாளும் அங்கு நடக்கும் இசைப் பயிற்சிகளை கண்டும் கேட்டும் வந்ததாலோ இல்லை இசை அவன் உயிருக்குள் கலந்து மறைந்து கிடந்ததோ தெரியவில்லை.  அனைவரும் ஆச்சரியப்படும் படியாக தங்கவேலுவுக்கு இசை ஞானம் பெருக்கெடுத்தது. பாடல்களை முணுமுணுக்கவும் தாளம் தட்டவும் ஆரம்பித்தான்.  கிராமத்துத் தமிழ் மறந்து வாத்தியாரைப்போல தூயத் தமிழில் உரையாட கற்றுக்கொண்டான். அவனுக்குள் தனித் திறமை இருக்கிறது என்பதை அறிந்த வாத்தியார் அவனையும் வகுப்புகளில்  இணைத்துக் கொண்டார். 

 

அவர் ஒரு சிறந்த ஆசான்.  செல்வந்தர் பிள்ளைகள், ஏழை பிள்ளைகள் என்று பாரபட்சம் பாராமல் அனைவருக்கும் கற்றுக்கொடுப்பார். குருதட்சணையாக எதைக் கொடுத்தாலும் எடுத்துக் கொள்வார். பணமோ, பொருளோ, தங்கள் தோட்டத்தில் விளைந்த காய்கறிகள், பழங்கள் என தன் மாணாக்கர்கள் எதைக் கொடுத்தாலும் அகமகிழ்ந்து பெற்றுக்கொள்ளும் தட்சணாமூர்த்தி அவர். தனி மனிதன்.

 

கலைவாணி கலையை அள்ளி அள்ளி இந்த ஏழைப்பையனுக்கு அமுதாக ஊட்டினாள் ராஜகோபால் வாத்தியார் மூலமாக.


தங்கவேலுவுக்கு தன் குருவுக்கு கொடுப்பதற்கு ஏதும் இல்லை.  வீட்டிலே பழையதும் இல்லை என்று தானே சபாவுக்கு ஊதியம் வேண்டாம் சோறு மட்டும் போதும் என்று வேலைக்குச் சேர்ந்தான்.  யார் என்ன கொடுப்பார்கள், யார் கொடுக்கவில்லை என்று கணக்கு பார்த்து சங்கீதம் கற்றுக்கொடுப்பவரல்ல ராஜகோபால் வாத்தியார்.

 

“பசங்க நல்ல வரணும். சங்ககீதம் கத்துக்கும்போது ஒழுக்கமும் கூடவே வரும். இங்க சங்கீதம் படிக்கிற பசங்களுக்கு சுருதி, தாளம், லயம், சொல் சுத்தம் இதெல்லாம் இருக்கணும். அப்பதான் இந்த ஆசான் சரியா கத்துக்கொடுத்ததா அர்த்தம்.  இந்த சபாவுக்கு பெருமை” என்பார்.  ஆனால் அந்த சபாவை தக்க வைக்க யாருமில்லாமல் போனது தான் காலத்தின் கோலம்.

 

 “வேலு, என்ன நடந்தாலும் சரி, ஒரு நாளு சோத்துக்கு இல்ல-னாலும் பரவாயில்லை. ஒரு நாளு சாப்பிடாம இருந்தா உயிர் போயிறாது.  ஒவ்வொரு நாளும் சில மணித்துளிகள் பயிற்சி செய்யனும், இசைய மறந்துறாதே!

“இசை  என்பது சாமி.  ஒரு வித்தையை நமக்கு ஒருத்தர் கத்துக் குடுக்கிறாருன்னா அது நமக்கு கிடச்ச வரம், அது ஒரு தவம்.  நாம இந்த உலகத்த விட்டு போறதுக்கு முன்னாடி,  நாம கத்துக்கிட்டத இன்னொருவருக்குச் சொல்லிக்கொடுத்துட்டுதான் உசிர விடனும்.  காசு வாங்கிகிட்டு சொல்லிக்குடுக்கிறது வேற.  நாம இந்த வித்தையை தானமா கொடுக்கனும்.  அதான் வித்யா தானம்”

தனியாக இருக்கும் போது ஒரு நாள் தங்கவேலுவிடம்  ராஜகோபால் வாத்தியார் உபதேசித்த அரிச்சுவடி. 

சுவடு மாறாமல் அப்படியே அடுத்த தலைமுறைக்கு விதைக்கப் பட்டது!

மெல்லொளி மெல்ல வீசும்

 

Comments

Popular posts from this blog

மெல்லொளி - பாகம் 1

மெல்லொளி - பாகம் 4

மெல்லொளி - பாகம் 3